
மார்கழித் திங்கள் மதி நறைந்த நன்னாளால்*
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்*
சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்*
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்*
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்*
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்*
நாராயணணே நமக்கே பறை தருவான்*
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்*
சொல் விளக்கம்: மார்கழி மாதத்திலே சிறந்த பெளர்ணமி நன்நாள் இன்று. ஆடை அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்ட பெண்டீரே! யமுனை ஆற்றிலே நீராட விருப்பமுள்ளவர்கள் வாருங்கள்! அழகிலும், வளத்திலும் உயர்ந்து விளங்கும் ஆய்ப்பாடியைச் (கோகுலம்) சேர்ந்த செல்வச்செழிப்புடைய பெண்களே, ஸ்ரீமந்நாராயணன் மோக்ஷத்தை நமக்கு அளிப்பான். அவன் (கண்ணன்), பகைவர்களுக்கு கொடுமையை விளைவிக்கக்கூடியவனும், கூர்மையான வேலாயுதத்தைக் கையிலே உடையவனுமாகிய நந்தகோப மகாராஜாவின் புத்திரன். அவன் (கண்ணன்) பேரழகிய கண்களை உடைய யசோதைப்பிராட்டியின் இளஞ்சிங்கம். அவன் (நாராயணன்) கருத்த மழைமேகங்களைப் போன்ற நிறத்தையும், செந்தாமரையைப் போன்ற சிவந்த ஒளி படைத்த கண்களையும், சூரியனைப்போன்ற பிரகாசத்தையும், சந்திரனைப்போன்ற குளிர்ச்சியையும் கொண்ட முகத்தை உடையவன். அந்த நாராயணனே நமக்கு மோக்ஷத்தை அளிக்கக்கூடியவன். இப்பாரில் உள்ளோர் எல்லோரும் புகழ, நாம் பாவை நோன்பு நோந்து, நாராயணனை அடைவோம்.
பொருள் விளக்கம்: திருப்பாவையின் அடிப்படைப் பொருளை இந்த முதல் பாசுரம் கூறுகின்றது. ஸ்ரீமந் நாராயணனே அவன் திருவடிகளை அடைவதற்க்கு ஒரே வழி.
நாராயணன் - உபாய ஸ்வரூபம்
நமக்கே - அதிகாரி ஸ்வரூபம்
பறை - பல ஸ்வரூபம்
அவனை அடைவதற்க்கு உத்திரவாதமான வழி அவனுடைய கருணையே அன்றி மற்றவேறொன்றும் இல்லை என்பதே இப்பாசுரத்தின் பொருளாகும்.
புண்ணிய மாதமாகிய மார்கழி, பன்னிறு உபவ்யூக மூர்த்திகளில் முதன்மையான, கேசவனைக் கொண்ட மாதமாகும். ஆகையினால், மார்கழியிலே செய்யப்படுகின்ற எந்தவொரு விரதம், தானம், ஸ்நானம் மற்றும் ஆராதனம் உடனடியாகப் பலனை அளிக்கும் என்று ஸ்வாமி வேதாந்த தேசிகன் தன்னுடைய “தாத்பர்ய சந்திரிகை” யிலே கூறுகிறார். அவ்வாறு நாம் எதிர்பார்க்கும் பலன், நம்பெருமாளின் சாம்ராஜ்யமான ஸ்ரீவைகுண்டத்திலே மோக்ஷம் எனப்படுகின்ற நித்யகைங்கர்யமே ஆகும். “ப்ராப்ய ப்ராபகங்கள் இரண்டும் நாராயணனே” என்பதே இப்பாசுரத்தின் சாரம் என்று ஸ்வாமி ஞாந்யாசார் தலைக்கட்டுகிறார்.
ஸ்வாபதேஸ பொருள் விளக்கம்: இந்தப் பாசுரத்திலும், மற்றும் உள்ள எல்லா பாசுரங்களிலும், ஆண்டாள் பிரயோகப்படுத்திய ஒவ்வொரு வார்த்தையிலும், பற்பல உள் அர்த்தங்கள் பொதிந்துள்ளன.
"சீர் மல்கும்" எம்பெருமாளின் அநந்தகல்யாண குணங்களை முற்றிலும் உணரப்பெற்றவர்களாயும், எம்பெருமாளின் கடாக்ஷத்தை உடையவர்களாயும் இருப்பவர்கள் வசிக்குமிடம்.
"ஆய்ப்பாடி" இந்த இருண்ட சம்சார உலகம்.
"நேரிழையீர்" மேன்மையான சாம தான குணங்களை உடையவர்கள். மங்களகரமான குணங்களாகிய அடக்கத்தையும், அமைதியையும் கொண்டவர்கள். இந்திரியங்களைக் கட்டுப்படுத்தியவர்கள்.
"நிறைந்த திங்கள் மதி" ஷட்குண்ய ஸம்பூர்ண பகவானைப் போலவே, பதினாறு கலைகளயும் கொண்ட சந்திரன்.
"நன்நாள்" மங்களகரமான இந்த நன்நாள். ஜீவாத்மாவுக்கு பரமாத்மாவுடன் உள்ள அடிமைத்தனத்தை அறிந்துகொள்ளும் நாளே நல்ல நாளாகும்.
"மார்கழி நீராடப் போதுவீர் போதுமினோ" ப்ரபத்தி என்னும் மேன்மையான உபாயத்தைப் பற்ற விருப்பமுடையீர். நாம் பெற்றிருக்கும் உடலின் பலன், இப்பொழுதும் எப்பொழுதும் எம்பெருமானுக்குத் தொண்டு செய்வதற்க்கேயாகும்.
"கூர் வேல்" கூர்மையான முனையை உடைய வேலைப்போன்ற சங்கல்பம்
"கொடுந்தொழிலன்" நம் பாபங்களை அழிப்பவன்
"நந்தகோபன் குமரன்" பிரம்மாவிற்க்கு வேதங்களையும் அவற்றின் பொருளையும் உறைத்தவனும், என்றென்றும் மாறாத இளமையை உடையவனுமாகிய பிரம்மானந்த ஸ்வரூபன்.
"எரார்ந்த கண்ணி" பேரழகுடையதாகிய வைஜயந்தி என்றழைக்கப்படுகின்ற மலர் மாலையை அணிந்தவன்.
"யசோதை" நமக்கு பிரம்மானந்தத்தை அளிப்பதால் நிச்சயமான கீர்த்தியை அடைந்தவன்
"இளங்சிங்கம்" பலம் பொருந்திய சிங்கத்தைப் போலே, நம்முடைய பாபங்களையும், எதிரிகளையும் அழிப்பவன்.
"கார்மேனி செங்கண்" மழை நிறைந்த மேகங்களைப் போன்று கருநீல நிறத்தையும், தாமரையைப் போன்ற கண்களையும் உடையவன்
"கதிர் மதியம் போல் முகத்தான்" ஒளிவிடும் சூரியனப் போன்ற பிரகாசத்தையும், குளிர்ந்த சந்திரனைப் போன்ற குளிர்சியையும் கொண்ட முகத்தை உடையவன்
"நாராயணனே" நம்மிடையே கிருஷ்ணனாக அவதரித்துள்ள அந்த சர்வேஸ்வரன்
"பாரோர் புகழப் படிந்து" நம்மீது தயை உடையவனும், எப்பொழுதும் நம்மை ரக்ஷிக்க வேண்டிய கடமையில் நுண்ணளவிலும் தவறாமல் இருப்பதால் இவ்வுலகத்தோரால் போற்றப்படுபவனும் ஆனவன்.
"நமக்கே" அவனுடைய திருவடிகளில் சரணாகதி என்ற ஆத்ம சமர்பணத்தை அளித்தவர்களாகிய நம்போன்ற பாகவதர்கள்
"பறை தருவான்" மோக்ஷானுபவத்தை அளிப்பான். தன்னுடைய பதிவிரதையாகிய துணைவியின்மேல் தீராத பாசத்தை உடைய பரமபுருஷனாகிய ஸ்ரீமந் நாராயணன் அவனுக்காக நாம் செய்ய வேண்டிய கைங்கர்யத்திற்கும், உபய அனுஷ்டானங்களான ஞானம், சீலம் மற்றும் பல ஆத்ம குணங்களுக்கும் வேண்டிய அனைத்தையும் அளிப்பான். (ஸ்ரீ அபிநவ தேசிகன்)
"நாராயணனே தருவான்" மகார ஜீவன்களாகிய சேதநர்களின் அஷ்டாக்ஷர ஜபத்தினால் சந்தோஷிக்கப்பட்டு, ஒரு சதாசாரியாரின் மூலமாக, திருமந்திரத்தின் உட்பொருளாக விளங்கும் ஸ்ரீமந் நாராயணனே உபாய அனுஷ்டானத்தை அளிப்பான். (ஸ்ரீ அபிநவ தேசிகன்)
“நாராயணனே” மற்றும் “நமக்கே” என்பவற்றில் உள்ள “ஏ”காரம்: “சதாசார்யனே தந்தருளவல்லான்; சசிஷ்யனே பெறத்தகுந்தவன்” என்பதையே இந்த ஏகாரம் ஸ்திரப்படுத்துகிறது. (அந்நங்கராசாரியார் ஸ்வாமி)
